ஜன் லோக்பால் சட்ட முன்வரை வை வலியுறுத்தி அன்னா ஹசாரே மேற் கொண்டுள்ள பட்டினிப் போராட்டத்துக்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவு அலை எழுந்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரிடையே யிருந்து, குறிப்பாக இப்பிரிவைச் சேர்ந்த இளைஞர்களிடையேயிருந்து ஆதரவு கிடைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அவர் தொடங்கிய முதல் பட்டினிப் போராட்டத்துக்குப் பிறகு ஊழல் எதிர்ப்பு இயக்கம் வேகம் பிடித்துள்ளது என்பதில் ஐயமில்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அர சின் அணுகுமுறையும், இந்த அரசு ஊழலைத் தடுக்கத் தவறியதுமாகச் சேர்ந்து நாடெங்கும் பரவலான கோபம் கிளறிவிடப்பட்டுள்ளது. முதலாவதாக, இந்த அரசை ஊழலில் ஊறிப்போன அரசாக மக்கள் பார்க்கிறார்கள். சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே மிகப்பெ ரும் ஊழல் மலிந்த அரசு இதுதான். அப் படிப்பட்ட ஒரு அரசுக்கு ஒரு தூய்மை யான பிரதமர் தலைமை தாங்குகிறார் என்ற முரண்பாடு நகர்ப்புற நடுத்தர வர்க்க மக்களின் உணர்வில் ஆழமாக இறங்கியிருக்கிறது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாக நடந்த ஊழல் நடைமுறை களை, அரசுக்கு இதனால் கொஞ்சம் கூட இழப்பு ஏற்படவில்லை எனக் கூறி நியா யப்படுத்துவதில் மத்திய அமைச்சர்கள் ஈடுபட்ட விதம், ஆழமான ஊழலில் சிக்கி யிருக்கிற இந்த அரசால் இதில் எவ்வகை யான அர்த்தமுள்ள நடவடிக்கையும் எடுக்க முடியாது என்ற பெரும்பகுதி மக்க ளின் அச்சம் சரியானதே என்று உறுதிப் படுத்தியுள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கானாலும் சரி, காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியானாலும் சரி, இரண்டிலேயுமே, அரசாங்கத்தைச் சார்ந்திராமல் சுயேச்சையாகச் செயல்படு கிற உச்சநீதிமன்றத்தாலும், தலைமைக் கணக்கு மற்றும் தணிக்கை அலுவல ராலும்தான் மத்திய புலனாய்வு நிறுவனம் விசாரணையைத் தொடங்கவும், குற்றவா ளிகள் மீது வழக்குத் தொடரவும் முடுக்கி விடப்பட்டது.
ஒரு வலுவற்ற, பயனற்ற லோக்பால் சட்ட முன்வரைவைக் கொண்டுவர அரசு முயன்றதால் இந்தப் பிரச்சனை மேலும் சிக்கலானது. அரசு முன்வைத்துள்ள சட்டமுன்வரைவு, லோக்பால் விசாரணை வட்டத்திலிருந்து பிரதமருக்கு விலக்கு அளிக்கிறது. லோக்பால் அமைப்பு எவ் வாறு ஏற்படுத்தப்படும் என்பதற்கான நடைமுறை, அதனை ஒரு சுயேச்சை யான அமைப்பாக செயல்படவிடாது. இந்த சட்டமுன்வரைவில் உள்ள விதிக ளின்படி அமைக்கப்படுகிற லோக்பால் அமைப்பு சுயேச்சையாகச் செயல்பட முடியாது. அரசாங்க மட்டத்திலான ஊழல் நடைமுறைகளில் தொடர்புடைய பெரிய தொழில் நிறுவனங்கள் மீதும், வர்த்தக நிறுவனங்கள் மீதும் லோக்பால் அமைப்பு நடவடிக்கை எடுப்பதற்கான விதிகள் எதுவும் இல்லை.
ஆணவத் தாக்குதல்
இரண்டாவதாக, பட்டினிப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே ஆகஸ்ட் 16 அன்று காலையில் அன்னா ஹசாரேயும் அவரது துணைவர்களும் கைது செய்யப் பட்ட விதம் தொடர்பாக ஐ.மு.கூட்டணி அரசும் காங்கிரஸ் தலைமையும் விசார ணைக்கு உள்ளாக வேண்டியுள்ளது. ஊழலுக்கு எதிராக போராடுகிற ஒரு வரை, ஒரு ஊழல் அரசு திஹார் சிறையில் அடைத்ததை மக்கள் மறந்துவிட மாட் டார்கள். அமைதியான முறையில் எதிர்ப் புத் தெரிவிப்பதற்கான குடிமக்களின் உரி மைகள் மீது ஆணவத்தோடு தொடுக்கப் பட்ட அந்தத் தாக்குதல் காரணமாக மக்களிடையேயும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் இந்த அரசு தனிமைப்பட்டுப் போயிருக்கிறது.
ஹசாரே தலைமையிலான இயக்கத்தை நாடாளுமன்றத்தின் மீதும், ஜனநாயக அமைப்புகளின் மீதும் தொடுக்கப்பட்ட ஒரு தாக்குதல் என மத்திய ஆளுங்கட்சி குற்றம் சாட்டுகிறது. ஆளுங்கட்சியின் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் அரசு ஒரு சட்டமுன் வரைவை தாக்கல் செய்துவிட்டதால், அதற்கு எதிரான எந்த ஒரு போராட்டமும் நாடாளுமன்றத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலே ஆகும் என்று கூறிக்கொள்கிறார் கள். இது சரியானதுதான் என்பதுபோல் தோன்றுகிற ஆனால், உண்மையில் ஒரு போலியான வாதமே ஆகும். நாடாளுமன்றத் தில் தாக்கல் செய்யப்படுகிற எந்த ஒரு சட்ட முன்வரைவையும் எதிர்த்துப் போராடுகிற உரிமை அரசியல் கட்சிகளுக்கும் மக்கள் அமைப்புகளுக்கும் உண்டு. இடதுசாரி கட்சிகளும் தொழிற்சங்கங்களும் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான எத்தனையோ சட்டமுன்வரைவுகளை எதிர்த்துள்ளன, எதிர்ப்புப் போராட்டங்களையும் நடத்தியுள் ளன. காப்பீடு, வங்கி ஆகிய நிதித்துறைகளை தாராளமயமாக்குவதற்கான சட்டங்களைக் கொண்டுவர முயற்சிகள் நடந்தபோது வேலைநிறுத்தப் போராட்டங்கள் வெடித்துள் ளன. 2002ல் அன்றைய பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கான (பொடா) முன்வரைவை கொண்டுவந்தபோது அதை காங்கிரஸ் கட்சியே கூட எதிர்த்திருக்கிறது. அந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும் கூட காங் கிரஸ் கட்சி தொடர்ந்து அதனை எதிர்த்த தோடு, அதனை விலக்கிக்கொள்ள வேண் டும் என்றும் வலியுறுத்தியதுண்டு.
ஊழலின் ஊற்றுக்கண்
ஊழல் இன்று ஒரு பெரும் பிரச்சனை யாக உருவாகியிருக்கிறது. இதுகுறித்து மக்க ளிடையே விழிப்புணர்வு விரிவடைந்திருக் கிறது. மக்கள் இதை எதிர்த்துப்போராடுவதில் உறுதியோடு இருக்கிறார்கள். ஆனால், பொது வாழ்க்கையின் அனைத்துத் தளங்களையும் பாதிக்கிற அளவிற்கு பரவியுள்ள கட்டுக்கடங் காத ஊழலுக்கு என்ன காரணம் என்பதை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டியிருக் கிறது. மார்க்சிட் கம்யூனிஸ்ட் கட்சி இன் றைய இந்த ஊழல் சீர்கேட்டையும் அதற் கான காரணங்களையும் அதன் விளைவு களையும் குறித்த தனது புரிதல்களை வெளிப் படுத்தியிருக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளாக, தாராளமயமாக் கல் கட்டவிழ்த்துவிடப்பட்டு நவீன தாராள மயக் கொள்கைகள் நடைமுறைக்கு வந்த தைத் தொடர்ந்து உயர்மட்ட ஊழல் என்பது நிறுவனமயமாக்கப்பட்டுவிட்டது. நவீன தாராளமய ஆதிக்கம் மிகப்பெரிய அளவிற்கு ஊழலை வளர்த்துவிட்டுள்ளது. பெரும்பா லான ஊழல்கள் பெரும் முதலாளிகள் - ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகள் - அதிகார வர்க்கத்தினர் ஆகியோரிடையே உருவாகியுள்ள கூட்டிலிருந்தே முளை விடுகின்றன.
ஐ.மு.கூட்டணி அரசின் ஏழாண்டு கால ஆட்சியிலும், பாஜக கூட்டணியின் முந்தைய ஆறாண்டு கால ஆட்சியிலும் எப்படி ஆட்சி யாளர்கள் பெரும் முதலாளிகளின் நலன்க ளுக்கு ஏற்ப வளைந்து கொடுத்தார்கள் என் பதை நாம் பார்த்திருக்கிறோம். பெரும் முதலாளிகள்-அரசியல்வாதிகள்-அதிகார வர்க்கத்தினர் கூட்டின் காரணமாக எப்படி யெல்லாம் தனியார்மயம் அதிகரித்தது, எப்படி யெல்லாம் இயற்கை வளங்கள் சூறையாடப் பட்டன என்பதையும் பார்த்திருக்கிறோம். நிலம், கனிம வளங்கள், இயற்கைவாயு போன்ற வள ஆதாரங்கள் பெரும் வர்த்தக மன்னர் களுக்காகக் கடத்தப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்திய - அந்நிய பெருமுதலாளி களுக்காக ஐ.மு.கூட்டணி அரசு எப்படி கொள்கைளை வகுத்தது, நடைமுறைகளை ஏற்படுத்தியது என்பதையும் நாம் பார்த்திருக் கிறோம். நவீன தாராளமய ஆதிக்கத்தால் அரசியல் அமைப்பே சீர்குலைந்து, பெருமுத லாளிகள் நாட்டாமை செலுத்துகிறார்கள். மேலும் அரசியல் என்பதே ஒரு வியாபாரமாக் கப்பட்டிருக்கிறது. அரசியலின் மூலமாக வியாபாரம் நடத்தப்படுகிறது.
ஆகவேதான், உயர்மட்ட ஊழல்களுக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு பன்முனை முயற்சி தேவைப்படுகிறது. வலுவானதொரு லோக்பால் அமைப்பு தேவைப்படுகிறது; அத் துடன் அரசியலில் பணபலம் விளையாடு வதைத் தடுக்க தேர்தல் முறையில் சீர்திருத் தங்கள் தேவைப்படுகின்றன; நீதித்துறையின் உயர்மட்டத்தில் நடக்கக்கூடிய ஊழல் களைக் கட்டுப்படுத்த தனியொரு சட்டத்தின் மூலம் ஒரு தனிப்பட்ட ஏற்பாடு தேவைப் படுகிறது; கருப்புப் பணத்தை கைப்பற்றவும், சட்டவிரோதமாக பணத்தை வரி விலக்குகள் உள்ள வெளிநாடுகளுக்குக் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உறுதியான அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன. அனைத்திற்கும் மேலாக ஊழல் வழிமுறை களின் மூலமாக மூலதனம் குவிவதை ஊக் குவிக்கிற, பெரும் நிறுவனங்கள் இயற்கை வளங்களை சூறையாட வழிவகுக்கிற நவீன தாராளமய ஆதிக்கத்தின் கூறுகளுக்கு முடிவுகட்டப்பட வேண்டும்.
நடுத்தர வர்க்க மனநிலை
அன்னா ஹசாரே தலைமையிலான இயக் கத்திற்கு குறிப்பாக நகர்ப்புற நடுத்தர வர்க்கத் தினரிடமிருந்துதான் ஆதரவு கிடைத்து வருகிறது. அவர்களில் பலர் இந்த தாராளமயக் கொள்கைகளின் ஆதரவாளர்கள். மன்மோ கன் சிங் அரசு தொடங்கிய பொருளாதார சீர் திருத்தங்களை ஆதரிப்பவர்கள். இன்று எங் கும் ஊழல் மலிந்துவிட்ட நிலையில் அவர் கள் தங்களது அன்றாட வாழ்க்கையை பாதிக் கிற ஊழலை ஒழித்துக்கட்ட ஒரு தேவதூதர் வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஒரு பக்கம் ஊழலை ஒழித்துக்கட்ட விரும்புகிற அவர்கள், இன்னொரு பக்கத்தில் தங்களுக்கு சில ஆதாயங்கள் கிடைப்பதற்குக் காரணமாக அமைந்த பொருளாதார அமைப்பு தொடர வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். எனவே தான், அவர்களால் நவீன தாராளமயக் கொள் கைகளுக்கும் அதனால் உருவாகியுள்ள ஊழலுக்கும் இடையேயான உயிரோட்ட முள்ள உறவைப் புரிந்துகொள்ள முடியவில் லை. நடுத்தர வர்க்க மனநிலை என்பது அரசியலுக்கு எதிரானதாக, அரசியல் வாதி களை குறைகூறுவதாக, நாடாளுமன்றத் தைக் குற்றம்சாட்டுவதாக அமைந்திருப்பது அன்னா ஹசாரே இயக்கத்தில் வெளிப்படு கிறது. எல்லா அரசியல் கட்சிகள் மீதும் இவர்கள் பாய்கிறார்கள், நாடாளுமன்றம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு ஒருதலைபட்சமான காலக்கெடு நிர்ணயிக் கிறார்கள் - இத்தகைய அணுகுமுறைகள் அவர்களது நோக்கம் குறித்தும், ஜனநாயக மாண்புகளில் அவர்களுக்கு உள்ள உறுதிப் பாடு குறித்தும் சந்தேகத்தை எழுப்புகின்றன. இது ஊழல் ஒழிப்பு என்ற நோக்கத்தின் நியாயத்தையும், அதற்கு கிடைத்த மக்கள் ஆதரவையும் திசை திருப்புகிறது.
அரசியல் அமைப்பில் பணத்தின் செல் வாக்கு அதிகரித்து வருவது குறித்து மக்க ளிடையே ஒரு நியாயமான கோபம் ஏற்பட்டி ருக்கிறது. ஆனால், இந்த பணத்தின் செல் வாக்கையும், ஊழல் உறவுகளையும் எதிர்த் துப் போராடுவதில் அரசியல் கட்சிகளை குறி வைத்துத் தாக்குவதால் மட்டும், மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள் கிற சிறு சிறு ஊழல்கள் மீது பாய்வதால் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது. அன்னா ஹசாரேயைச் சுற்றி உருவாகியுள்ள இயக்கத் தின் சீரற்ற தன்மையை முதலாளித்துவ ஊட கங்கள் உள்ளிட்ட வலதுசாரி சக்திகள் பயன் படுத்திக்கொள்ள முயல்கின்றன. ஊழலின் ஊற்றுக்கண் எதுவோ அதிலிருந்து இயக்கத் தை திசை திருப்ப முயல்கின்றன. சமுதாயத் தில் ஊழல்களின் உண்மைக் காரணங்களுக் குத் திரையிடும் முயற்சி தொடர்ந்து நடை பெறுகிறது. முன்னேறும் சமூகங்கள் குறித்த ஆய்வு மையம் அண்மையில் மக்களிடையே ஒரு கருத்துக்கணிப்பை மேற்கொண்டது. அதன் முடிவுகள் தி ஹிண்டு நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் மிகவும் ஊழல் செய்கிறவர் யார் என்ற கேள்விக்கு, 32 விழுக்காட்டினர் அரசு ஊழியர்கள்தான் என்று பதிலளித்துள்ளனர்; 43 விழுக்காட் டினர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் பெரும் ஊழல் பேர்வழிகள் என்று கூறியுள்ளனர்; 3 விழுக்காட்டினர் மட்டுமே தொழிலதிபர்களும் வர்த்தகர்களும் தான் பெரும் ஊழல்காரர்கள் என்று கருத்துக் கூறியிருக்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தின ரிடையே மேலோங்கி இருக்கிற கருத்து இதுதான்.
ஒவ்வொரு ஊழலின் பின்னணியிலும்
அண்மைக் காலத்தில் வெளிவந்த எந்த ஒரு பெரும் ஊழல் விவகாரத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் பின்னால் ஒரு பெரும் தொழில் நிறுவனமோ, வர்த்தக நிறுவனமோ இருந்திருக்கிறது. அவர்கள் அரசு ஊழியர் களுக்கு - அவர்கள் அமைச்சர்களாக இருக் கலாம் அல்லது அலுவலர்களாக இருக்கலாம் - லஞ்சம் கொடுத்து தங்கள் வேலைகளை முடித்துக்கொள்ள முயன்றிருக்கிறார்கள். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, கிருஷ்ணா- கோதா வரி நதிப்படுகை ஒப்பந்தம் ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் அனைத்திலும் பெரு முதலாளிகளின் கைகள் மறைந்திருக்கின் றன. அரசாங்கம் முன்வைத்திருக்கிற லோக் பால் சட்ட முன்வரைவில் இந்தப் பிரச்ச னைக்கு பதில் எதுவும் இல்லை. அன்னா ஹசாரே குழுவினர் முன்வைத்துள்ள ஜன் லோக்பால் சட்ட முன்வரைவிலாவது, சட்டத் திற்குப் புறம்பாக ஒப்பந்தங்களைப் பெற்ற நிறு வனங்களின் ஒப்பந்தங்கள் விலக்கிக்கொள் ளப்பட வேண்டும், அந்த நிறுவனங்களின் மீது அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற பரிந் துரைகள் இருக்கின்றன. ஆனால், இந்த ஊழல் எதிர்ப்பு இயக்க மையம், உண்மை யான இலக்கைத் தவறவிட்டதாகவே இருக்கிறது.
அன்னா ஹசாரே பட்டினிப் போராட்டம் தொடங்கிய 8 நாட்களுக்குப் பிறகு பொது மக்க ளின் நிர்ப்பந்தம் காரணமாக அரசு பணிந்து, அவரது குழுவைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறது. இது ஒரு வரவேற்கத்தக்க நிகழ்ச்சிப் போக் குதான். இது ஒரு வலுவான, பயனுள்ள லோக் பால் அமைப்பை ஏற்படுத்துவதற்கான ஒரு புதிய, திருத்தப்பட்ட சட்டமுன்வரைவு உருவாவதற்கு இட்டுச்செல்லும் என்று நம்புவோமாக.
நன்றி: தி ஹிண்டு (25, ஆகஸ்ட் 2011)
தமிழில்: அ. குமரேசன்