Thursday, 25 August 2011

அண்ணா ஹசாரே போராட்டமும் அதன் உண்மையும்

 கேள்விகள்...கேள்விகள்..கேள்விகள்







காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சிக்கும் சில கேள்வி

1) மடியில் கனமில்லையெனில் வழியில் பயம் எதற்கு? ஜன்லோக்பால் மசோதாவை ஏற்கமுடியாவிட்டலும் அந்த அறச்சீற்றத்தை உள்வாங்கி வலுவான மசோதா கொண்டுவரத் தயக்கம் ஏன்?

2) உங்கள் ஆட்சியில் ஊழல் அடுத்தடுத்து படை எடுக்கும் போது உங்கள் மன்ச்சாட்சி உறுத்தவில்லையா?அதனை சுயவிமர்சனம் செய்ததுண்டா?நீங்கள் போற்றிப்புகழும் உலகமயக் கொள்கைகளின் கோரநர்த்தனமே பல லட்சம் கோடி ஊழல் என்பது உண்மையல்லவா?அதனை ஒப்புக் கொள்ளும் மனத்திண்மை உண்டா?

3) பெருகும் ஊழலுக்கு தார்மீகப் பொறுப்பு பிரதமர்தானே? அவர் அதை ஏற்காமல் எனக்கு எதுவும் தெரியாது என்பது நாட்டுமக்களை மடையர்களாகவும் ஏமாளிகளாகவும் கருதும் அதிகாரத்திமிர் அல்லவா?

4) உங்கள் பக்கம் நியாயம் இருப்பின் கொள்கைப் போருக்கும் மனம் திறந்த விவாதத்திற்கும் பகிரங்கமாக அழைக்கலாமே? அதைவிடுத்து அடக்குமுறையை ஏவியது ஏன்? புண்ணை சொறிந்து சீழ்பிடிக்க வைப்பதுபோல் முட்டாள்த்தனமாக நடந்துகொண்டது ஏன்? ‘சிவில் சொசைட்டி’என்ற போர்வையில் செயல்படுவது யார் என்று தெரியாதா? பின்புலம் தெரியாதா? அவர்களிடம் பேசி கருத்துக் கேட்பது என்பது வேறு; அவர்களோடு கூட்டுக்குழு அமைத்தது ஏன்?ஊழலை ஒழிக்கும் உறுதியும் தொலைநோக்குப் பார்வையும் இல்லாது தடுமாறுவது தலைமைப் பண்பாகுமா?

5)போபர்ஸ் ஊழலில் சம்மந்தப்பட்டவரைக் காக்க அரசு நிறுவனங்கள் அனைத்தும் தவறாக ஈடுபடுத்தப்பட்டதால்தானே ஊழல் பெருச்சாளிகளுக்கு குளிர்விட்டுப்போனது? அதற்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவிவிலகி மீண்டும் மக்களைச் சந்திக்க என்ன தயக்கம்?

மேலும் கேள்விகள் பின்னர்...


பாஜகவுக்கு சில கேள்விகள
1) நீங்கள் அன்னா ஹஷாரே முன்மொழியும் ஜன்லோக்பாலை ஆதரிக்கிறீர்களா?‘ஆம்’ எனில் நாடாளுமன்றத்தில் உங்கள் கட்சியின் சார்பில் அதனை தாக்கல் செய்யலாமே? ஏன் செய்யவில்லை? ஏன் இரட்டை வேஷம்?

2) ஊழல் ஒழிப்பில் உங்கள் கட்சிக்கு உண்மையான அக்கறை இருப்பின் எடியூரப்பாவை காப்பாற்ற பெருமுயற்சி ஏன்?2ஜி ஊழலின் தொடக்கப்புள்ளியான ஐம்பதாயிரம் கோடி ஊழல் அருண்ஷோரி பற்றி வாய் திறக்காதது ஏன்?சுரங்கத்திருடர் ரெட்டி சகோதரர்கள் பல ஆயிரம் கோடி சூறையாடுவதுக்கு மவுனமாகத் துணைபோவது ஏன்?ஊழல் பெருச்சாளி சுக்ராமுக்காக பல நாட்கள் நாடாளுமன்றத்தையே முடக்கினீர்கள்,ஆனால் அடுத்த சில மாதங்களில்- அந்த ஊழல் வழக்கு நிலுவையிலுள்ளபோதே அவரை ஆதரித்து இமாச்சலபிரதேச முதல்வர் ஆக்கினீர்கள்.உங்களை ஆதரித்த அடுத்த நொடியே அவர் புனிதரானது எப்படி?

3) இன்றைய ஊழல் பெரும் கொள்ளைக்கு அடித்தளமாக இருப்பது உலகமய தனியார்மய தாராளமயக் கொள்கைகள் அல்லவா?அதை அமலாக்குவதில் உங்களுக்கும் காங்கிரஸுக்கும் ஒரே நிலைபாடுதானே?இந்தக் கொள்கைகளை மாற்றாமல் ஊழலை வேரறுக்க முடியுமா?அடிப்படை பிரச்சனைகளிலில் இருந்து மக்கள் கவனத்தை சற்றே திருப்பி ஆட்சியைப்பிடிக்கும் குறுக்குவழியாகத்தான் நீங்கள் ஊழல் ஒழிப்பு நாடகம் ஆடுகிறீர்கள் எனில் தவறா?

4) மண்டல் கமிஷனுக்கு எதிராக அன்று ஊடகங்களும் மேல்தட்டு மக்களும் நட்த்திய நாடகத்துக்கும்; இன்று ஹஷாரே குழுவினர் போராட்டத்துக்கும் என்ன வேறுபாடு? இப்படி முகமூடி அணியாமல் - மக்களிடம் உண்மைகளை மறைக்காமல் போராட உங்களால் முடியுமா? பாசிஸ்டுகளின் குணமே இப்படி மோசடித்தனமானதுதானே..அதனை நீங்கள் மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கிறீர்கள் அல்லவா?

5) சிவில் சொசைட்டி நாடாளுமன்றத்துக்கு மேலானது என்பதை உங்களால் ஏற்க முடியுமா? அரசியலின் பாலபாடம் தெரிந்தோர்கள் யாராயினும் இதனை ஏற்க மாட்டார்களே..அப்படியிருக்க அன்னாஹஷாரேவுக்கு நீங்கள் அதை உணர்த்தாதது ஏன்? உள்ளொன்றுவைத்து வெளியொன்று பேசும் உத்தமவேடம் ஏன்?ஏன்?

மேலும் கேள்விகள் பின்னர்...


அன்னா ஹஷாரே அவர்களுக்கு சில கேள்விகள் :

1) ஊழலின் ஊற்றுக்கண் இன்றைய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளே என்பதை அறிவீர்களா? ‘ஆம்’ எனில் அதற்கு எதிராக இதுவரை உங்கள் குரல் ஒலிக்காதது ஏன்? ‘இல்லை’ எனில் நீங்கள் நடத்துகிற போராட்டம் நிழல் சண்டை அன்றி வேறென்ன?

2) உங்கள் ஜன்லோக்பால் மசோதாவை ஆதரிக்கும் கட்சிகள் எவை? எவை?உங்கள் போராட்டத்தின் பின்பலமாக உள்ள பாஜக உங்கள் மசோதாவை பகிரங்கமாக ஆதரிக்காதது ஏன்? அதை ஏன் நீங்கள் கேட்கவில்லை?

3) எளிமையான உண்ணாவிரதத்துக்கு ஏன் இவ்வளவு ஆடம்பரம்?அள்ளிக் கொட்டும் பணத்திற்கு பின்னால் உள்ள வஞ்சகக் கைகள் எவை?உங்களை ஆதரிக்கும் தொண்டுநிறுவனங்கள் எப்படி யாரால் எதற்காக இயக்கப்படுகின்றன?இதனை நீங்கள் அறியமாட்டீர்கள் என்று நம்ப முடியுமா?

4) உங்கள் பின்னால் திரளும் மேட்டுக்குடி இளைஞர்களின் பெற்றோர்கள் திரட்டிய பெரும் செல்வம் நேர்மையான உழைப்பால் பெறப்பட்டதென்று நீங்கள் உறுதிதர முடியுமா?

5) ஊழலால் கொள்கைகள் தடம் மாறியதா?அல்லது ,தவறான கொள்கைகளின் விளைவு ஊழலா?மூலதனத்தின் மூர்க்கக் கொள்ளையின் உடன்பிறப்புதானே ஊழல்? இதை எதிர்க்க உங்களிடம் உள்ள மாற்று என்ன?

மேலும் கேள்விகள் பின்னர்...


மக்களுக்கு சில கேள்விகள்...
 1) அடி முதல் நுனி வரை ஊடுருவி இருக்கும் ஊழலுக்கு எதிராக நீங்கள் குக்கிராமம் தொடங்கி தலைநகர் வரை வீதிகளில் திரளுவது எப்போது?உங்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்கு பயன்படவேண்டிய பல லட்சம் கோடி ரூபாய் ஊழலில் கொள்ளை போவதற்கு எதிராக வெஞ்சினம் பொங்kuவது எப்போது?

 2) காங்கிரஸும், பாஜகவும் ஆண்ட லட்சணம்தான் இந்த ஊழல்கள் என்பதை நீங்கள் இனியும் புரியாமலிருக்கலாமா?இன்று இவர்கள் நடத்துகிற நாடகங்கள் உங்களை ஏய்க்கவும் பதவிக்காகவும்தான் என்பதை மறக்கலாமா?

3)உங்கள் விளைநிலங்கள் பறிக்கப்படும்போது-விவசாயம் நொடிந்து விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும்போது-விலையேற்றம் குரல்வளையை நெரிக்கும்போது-வேலையின்மை உங்கள் வீட்டில் குடியேறும்போது-சுயதொழில்,சிறு குறு தொழில்கள் நசிந்து வாழ்வை இழக்கும்போது-தீண்டாமை மிதிக்கும்போது உண்ணாவிரதம் இருக்காதவர்கள்,ஓடோடிவராத ஊடகங்கள் இப்போது ஊளையிடுவது ஏன்?யோசிக்க வேண்டாமா?ஊடகங்கள் பிரச்சாரம் செய்வதற்கும் உங்கள் வாழ்க்கைக்கும் ஏதாவதுதொடர்பு உள்ளது என்று கூறமுடியுமா?அல்லது இன்று கூப்பாடிடுவோர் உங்கள் நலனை என்றாவது உண்மையாக சிந்தித்ததுண்ட?இன்னும் எத்தனை நாள் ஏமாளியாக இருக்கப் போகிறோம்?

4) குடியானவன் வீட்டு மாடு பண்ணையார் வயலில் மேய்ந்துவிட்டால்,குடியானவனுக்குத்தான் தண்டனை;அதேசமயம் பண்ணையார் வீட்டு மாடு குடியானவன் துண்டுதுக்காணி நிலத்தில் மேய்ந்துவிட்டால் புகார் செய்யவும் இயலுமா? அப்படியே புகார் செய்தாலும் கேள்வி என்ன எழும் தெரியுமா?வயலுக்கு ஏன் வேலி போடவில்லை? இது தான் வர்க்க நியாயம்.எப்போதும் யார் எதைச் சொன்னாலும் அதற்குப் பின்னால் ஒரு வர்க்கத்தின் நலம் ஒளிந்துகொண்டிருக்கிறது என்பதை இனியும் உணராமல் இருக்கலாமா?

5) நீங்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் ஓடோடிவந்து போராட்டம் நடத்தியவர்கள் யார்? உங்கள் பிரச்சனைகளுக்கு மாற்று திட்டம் வைத்திருப்பவர்கள் யார்?இடது சாரிகள் அல்லவா?அவர்களோடு தோள் இணைந்து நிற்கவேண்டாமா?

மேலும் கேள்விகள் பின்னர்...


----
சு.பொ.அகத்தியலிங்கம்
agathee2007@gmail.com

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More